
சுங்கை பூலோ, மே-10- பி.கே.ஆர் தேர்தலில் முக்கியப் பதவிகளுக்கு கடும் போட்டி நிலவினாலும், முகாம்களாக பிரிந்துகிடக்காமல் அக்கட்சி ஓரணியாக வலுவாக நிற்கிறது.
அதன் துணைத் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவ்வாறு தெரிவித்தார்.
நிறுவப்பட்டு 26 ஆண்டுகள் ஆகியுள்ள அக்கட்சியில் ஒரணி மட்டுமே உள்ளது; அது தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அணி என ரமணன் சொன்னார்.
யாரும் எதிர்த்து போட்டியிடாததால் 2025-2028 வரைக்குமான தவணை க்கும் அன்வாரே கட்சித் தலைவர்.
ஆனால் துணைத் தலைவருக்கு டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, நூருல் இசா அன்வார் என இருபெரும் புள்ளிகள் போட்டியில் குதித்துள்ளனர்.
இதனால் பி.கே.ஆரில் 2 முகாம்கள் இருப்பதாக பேச்சு எழுந்துள்ளது.
அதோடு தேர்தல் முடிந்ததும் கட்சி உடையமென்றும் பேசப்படுகிறது.
அதனை மறுத்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணையமைச்சருமான ரமணன், அப்படி பேசுவோரால் தான் அணிகள் உருவாகுமென சாடினார்.
ஒரு ஜனநாயகக் கட்சியில், போட்டிகள் ஆரோக்கியமாகவும் குடும்ப உணர்வோடும் நடைபெற வேண்டும்.
வெறுப்புணர்வுக்கோ தூண்டி விடுதலுக்கோ அங்கு இடமில்லை என்றார் அவர்.
எனக்குத் தெரிந்த வரை துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணம் ஆரம்பத்தில் நூருல் இசாவுக்கு இல்லை.
ஆனால் அடிமட்ட தொண்டர்களும், 201 தொகுதித் தலைவர்களும் அமோக ஆதரவளித்ததால் அவர்களின் விருப்பத்தை நூருல் இசாவால் தட்டிக் கழிக்க முடியவில்லை என, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் சொன்னார்.
இவ்வேளையில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் தமக்கு கடும் போட்டி காத்திருப்பதை ரமணன் ஒப்புக் கொண்டார்.
இதுவரை கெடா, பினாங்கு போன்ற மாநிலங்களில் நல்லாதரவு கிடைத்துள்ளது; தேர்தலுக்கு முன் மேலும் ஏராளமான தொண்டர்களின் ஆதரவைப் பெற கடுமையாக உழைப்பேன் என அவர் சொன்னார்.
4 உதவித் தலைவர் பதவிகளுக்கு ரமணன் உட்பட 11 பேர் இம்முறை குறி வைத்துள்ளனர்.