Latestமலேசியா

புகைமூட்டம்: இந்தோனேசியாவை ஒதுக்க வேண்டும் என்ற Syed Sadiqக்கின் கருத்துக்கு அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் கண்டனம்

கோலாலம்பூர், அக்-21-இந்தோனேசியாவில் மீண்டும் மீண்டும் ஏற்படும் எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைக் காரணம் காட்டி, அந்நாட்டை ஆசியான் அமைப்பில் ஒதுக்கப்பட்ட நாடாக நடத்த வேண்டும் என்ற மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahmanனின் கருத்துக்கு, இந்தோனேசியாவின் முன்னாள் அமைச்சர் Muhammad Lutfi கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புகைமூட்டத்தால் ஆயிரக்கணக்கான இந்தோனேசியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தீயணைப்புப் பணியில் ஈடுபட்ட சிலர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய நெருக்கடியை விளம்பரம் தேடுவதற்குப் பயன்படுத்தக்கூடாது. விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், அவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதைப் பொருட்படுத்தாமல் பொறுப்பேற்கச் செய்யப்பட வேண்டும் என முன்னாள் வர்த்தக அமைச்சரான அவர் வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவில் செயல்படும் மலேசியத் தோட்ட நிறுவனங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மலேசிய நிறுவனங்கள் அங்கு சுமார் 3.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தைக் கையாண்டு வருகின்றன. Greenpeace அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 19 வெப்பப் புள்ளிகளும் மலேசிய நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்தோனேசிய நிலச் சலுகைப் பகுதிகளுக்குள் இருப்பதாக Lufti சுட்டிக் காட்டினார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பேசிய Syed Saddiq, புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தோனேசியா மீது ஆசியான் நாடுகள் இராஜதந்திர மற்றும் நிதி அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரியிருந்தார். காட்டுத்தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளிப்பதை நிறுத்துவதுடன், அத்தகைய நிறுவனங்களுக்கு எதிராக பயனீட்டாளர்களையும் ஒன்றுதிரட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதனிடையே, சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம், கலிமந்தானில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த மேலும் மூன்று நிறுவனங்களுக்கு அறிவிப்பாணை அனுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன் மூலம், அந்நாட்டின் எல்லை தாண்டிய புகைமூட்ட மாசுச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தோனேசியக் காட்டுத்தீயால் நிலவும் புகைமூட்டம் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் சில பகுதிகளைப் பாதித்துள்ளது. எனினும், இந்தோனேசியாவில் கண்டறியப்பட்ட பெரும்பாலான காட்டுத்தீச் சம்பவங்கள் மலேசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான செம்பனைத் தோட்டங்களுக்கு வெளியே நிகழ்ந்ததாக அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் Datuk Seri Fahmi Fadzil தெரிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!