
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-4-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை நுழைவாசலில் அமைந்துள்ள இந்து கோயிலுக்கு எதிராக, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்தை இரத்துசெய்யுமாறு, அதன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஸ்டீவன் சிம் அக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கு சமம் எனக் கூறிய அவர், அவற்றை தடுக்காவிட்டால் நாட்டையே அழித்து விடும் என்றும் எச்சரித்தார்.
எனவே, போராட்டத்தை இரத்துச் செய்யுங்கள், சினமூட்டும் நடவடிக்கையை நிறுத்துங்கள், கலவரத்தை உண்டாக்காதீர்கள் என ஸ்டீவன் கேட்டுக் கொண்டார்.
எந்தவொரு தரப்பும் அங்கு போராட்டத்தில் இறங்குவதை அனுமதிக்க வேண்டாம் என போலீஸையும் தாம் கேட்டுக் கொண்டிருப்பதாக, ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட கோயில் அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது; ஆனால், சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அக்கோயில் அங்கிருப்பதாக பினாங்கு இந்து தலைவர்கள் கூறி வருகின்றனர்.
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோலாலம்பூரில் அண்மையில் நடைபெறத் திட்டமிடப்பட்ட பேரணி, கடைசியில் பிசுபிசுத்துப் போன நிலையில், தற்போது பினாங்கில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.



