கோலாலம்பூர், ஜனவரி-2, கோலாலம்பூரில் நேற்று முன்தினம் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பதின்ம வயது சிறார்களுக்கு, தோப்புக் கரணம் தண்டனையாக வழங்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
14 வயது முதல் 17 வயதிலான அந்த 21 பேரும், பிரேக், விளக்கு, மணி இல்லாத basikal lajak சைக்கிள்களை, போட்டிப் போட்டுக் கொண்டு ஆபத்தான முறையில் சாலையில் ஓட்டிச் சென்றனர்.
எனினும் ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில் சாலைத் தடுப்புச் சோதனையிலிருந்த போக்குவரத்துப் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.
உண்மையில் சைக்கிள்களுக்கு சீல் வைப்பது போன்று போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அவர்களுக்குத் தண்டனைகள் விதிக்கலாம்.
ஆனால், சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அச்சிறார்களுக்கு தோப்புக் கரணம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்பட்டதாக, கோலாலம்பூர் குற்றப்புலனாய்வு மற்றும் போக்குவரத்து அமுலாக்கத் துறையின் தலைவர் Mohd Zamsuri Mohd Isa தெரிவித்தார்.
இனிமேலும் அப்படி செய்யக் கூடாது என்றும் நேராக வீட்டுக்குச் செல்லுமாறும் எச்சரிக்கை விடுத்து அவர்களை போலீஸ் அனுப்பி வைத்தது.
இளம் குற்றவாளிகளின் வயதைக் கருத்தில் கொண்டு போலீசார் தோப்புக் கரணம் போன்ற தண்டனையை வழங்கியதை சமூக வலைத்தளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.