
கோலாலம்பூர், அக்டோபர்-23,மலேசியாவில் சுமார் 65 விழுக்காட்டு புற்றுநோய் பாதிப்புகள், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்களில்தான் கண்டறியப்படுகின்றன.
இந்தத் தாமதமான கண்டறிதல் சிகிச்சையை மிகவும் சவாலானதாகவும், உயிர் வாழும் விகிதத்தைக் குறைப்பதாகவும், தேசியப் புற்றுநோய் பதிவக அறிக்கைக் கூறுகிறது.
பலரும் புற்றுநோய் முதியவர்களை மட்டுமே தாக்கும் என்ற தவறான எண்ணத்தாலும், உளவியல் காரணங்களாலும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ உதவியை நாடுவதில்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கும், புகைபிடிக்காதவர்களுக்கும் கூட புற்றுநோய் வரலாம்.
தவிர, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உடல் பருமன் காரணமாக, பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் தற்போது இளம் தலைமுறையினரையும் அதிகம் பாதிக்கிறது.
எனவே,காரணமில்லாத உடல் எடை இழப்பு, இரத்தப்போக்கு அல்லது 6 வாரங்களாகக் குணமாகாத புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய பரிசோதனை முறைகளையும், நவீன யுக்திகளையும் பின்பற்றுவது உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.



