
பெரா, அக்டோபர்-24,
பஹாங், பெராவில் (Bera) காரொன்று மாட்டுக் கூட்டத்தை மோதி நிகழ்ந்த ஒரு விபத்தில், 11 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நேற்றிரவு சுமார் 9.40 மணியளவில், ஜாலான் கெராயோங் – சிம்பாங் கெப்பாயாங் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்தது.
22 வயது இளைஞர் ஓட்டிய பெரோடுவா பெசா கார், திடீரென சாலையை கடந்த மாடுகளுடன் மோதுவதைத் தவிர்க்கும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்தக் காரில் அவர், 21 வயது மனைவி மற்றும் 11 மாத பெண் குழந்தை இருந்தனர்.
குழந்தை நூர் அட்ரியானா அமீரா முஹமட் நோரிஸ்மாயில் (Nur Adriana Amira Mohamad Norismail) தாயின் மடியில் இருந்தபோது தலையில் படுகாயம் அடைந்தது.
உடனடியாக கிளினிக் கொண்டு செல்லப்பட்ட போதும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தாயும் தந்தையும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
விபத்தில் இரண்டு மாடுகள் பலியான வேளை, மற்றொன்று காயமடைந்தது.



