
கோலாலம்பூர், மார்ச்-29-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்க ம.இ.காவுக்கு கொஞ்சம் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
பாஸ் கட்சியின் பொருளாளர் இஸ்கண்டார் அப்துல் சமாட் அவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பெரிக்காத்தானில் இணையும் ம.இ.காவின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு தேசிய முன்னணியிலேயே நீடிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை கடந்த வாரம் முடிவுச் செய்தது.
இதையடுத்து, ம.இ.கா அதன் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுப்படுத்த வேண்டும் என, பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் நேற்று வலியுறுத்தினார்.
என்றாலும், இந்த விஷயத்தில் ம.இ.காவுக்கு அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை என இஸ்கண்டார் கூறுகிறார்.
பெரிக்காத்தானில் இப்போது தான் தலைமைத்துவ மாற்றம் நிகழ்ந்துள்ள்ளது.
இந்த நடப்புச் சூழலை ம.இ.கா எச்சரிக்கையாக அணுகுவது அரசியலில் சாதாரணமான விஷயம் என இஸ்கண்டார் சொன்னார்.
எந்தக் கூட்டணியில் இருப்பது அரசியல் ரீதியாக இலாபம் என்பதை ம.இ.கா யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை என்றார் அவர்.
கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்துக்களை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ம.இ.கா தரப்பில் கூறப்படுகிறது.
எந்த முடிவாக இருந்தாலும், அடுத்த பொதுத் தேர்தலில் மலேசிய அரசியலில் அது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்…



