
சீக், டிசம்பர்-3 – கெடா, சீக்கில் கடும் பசியில் ஒரு முழு ஆட்டையே விழுங்கி விட்டு நகர முடியாமல் கிடந்த பெரிய மலைப்பாம்பை, தீயணைப்பு-மீட்புத் துறையினர் பிடித்திருக்கின்றனர்.
Kampung Keda Bendang Man-னில் இரப்பர் தோட்டமருகே இருந்த ஆட்டுக் கொட்டகையில் திங்கட்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.
காலை 10 மணியளவில் இரப்பர் மரம் சீவிக் கொண்டிருந்த 50 வயது மாது, தனக்குச் சொந்தமான அந்த ஆட்டுக் கொட்டகையில், உண்ட மயக்கத்தில் படுத்துக் கிடந்த மலைப்பாம்பைக் கண்டு தீயணைப்பு-மீட்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
4 மீட்டர் நீளமும் 15 கிலோ கிராம் எடையும் கொண்ட அந்த மலைப்பாம்பை, தீயணைப்புத் துறையினர் 15 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாகப் பிடித்தனர்.
பாத்திக் வகை அம்மலைப்பாம்பு, சில நாட்களுக்கு முன் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் வழி தவறி வந்திருக்கக் கூடுமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்த பருவகால மாற்றத்தில் குறிப்பாக வீடுகளைச் சுத்தம் செய்யும் போது, பாம்புகள், பூரான்கள் போன்ற விஷ ஜந்துக்கள் குறித்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு பொது மக்களை தீயணைப்பு-மீட்புத் துறை கேட்டுக் கொண்டது.