
கோலாலம்பூர், அக்டோபர்- 8,
இந்திய சமூகத்தின் தொழில்முனைவு திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘PERNAS’ ‘சூரியன்’ (SOORIAN) எனும் புதிய நிறுவன சமூக பொறுப்பு (CSR) முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் இந்திய சமூகத்தை ‘Francise’ துறையில் ஈடுபடச் செய்து, பயிற்சி, வழிகாட்டல் மற்றும் நிதி ஆதரவு மூலம் தொழில்முனைவோரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மெனாரா PERNAS கட்டிடத்தில் நடைபெற்ற தொடக்க விழா, துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையிலும் பெர்னாஸ் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ நோர் அசாம் எம். தாயிப் (Datuk Nor Azam M. Taib) மற்றும் பல அரசு தொழில் பிரதிநிதிகள் முன்னிலையில் மிக சிறப்பாக நடந்தேறியது.
நாடு முழுவதும் 1,000 பங்கேற்பாளர்களை அடைவதை இலக்காகக் கொண்ட இத்திட்டம் 54.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுகிறது.
நீண்டகால சமூக முதலீடான ‘சூரியன்’ புதிய தொழில்முனைவோரை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை வழங்கி, மக்களின் நலனை நிச்சயம் மேம்படுத்தும் என்று டத்தோ அசாம் தெரிவித்தார்.
அதேசமயம் இத்திட்டம் MADANI அரசின் கொள்கை மற்றும் தேசிய தொழில்முனைவு கொள்கை 2030-இன் (DKN 2030) நோக்கங்களுடன் இணங்கும் என்றும் இது இந்திய சமூகத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி, தேசிய ஒற்றுமைக்கு பங்காற்ற வழிவகுக்கும் என்றும் டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
இந்நிலையில் புதிய ‘சூரியன்’ திட்டம் சமூக அடிப்படையிலான உட்சேர்க்கை வளர்ச்சியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்பட்டு வருகின்றது.