![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/cfdee8fd-8325-4488-b25b-041919c2fb11-700x470.jpg)
புத்ராஜெயா, பிப்ரவரி-6 – மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன், நேற்று புத்ராஜெயாவில் உள்ள பொதுச் சேவை ஆணையமான SPA அதிகாரிகளுடன் சிறப்புச் சந்திப்பை நடத்தினார்.
SPA தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஜைலானி யூனுஸ் உடனான அச்சந்திப்பில், ம.இ.கா இளைஞர், மகளிர் மற்றும் புத்ரா பிரிவுகளின் தலைவர்களும் சிவராஜ் உடன் சென்றனர்.
பொதுச் சேவைத் துறையில் ஆள் சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
அரசாங்க வேலைகள் அனைத்து மலேசியர்களும் உரித்தானவை; தகுதி மற்றும் ஆற்றல் அடிப்படையில் உரியவர்கள் தேர்வுச் செய்யப்படுவதாக, அச்சந்திப்பின் போது SPA தெளிவுப்படுத்தியது.
வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, வேலைக்கு ஆள் சேர்ப்பும் அதிகரிக்கப்படுமென SPA உறுதியளித்தது.
எனவே, பொதுச் சேவைத் துறைக்கு மேலும் ஏராளமானோர் விண்ணப்பிப்பது முக்கியமாகும்; இந்தியர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்களும் வரவேற்கத் தக்க வகையில் உள்ளன.
இந்நிலையில், மேலும் ஏராளமான இந்தியர்கள் அரசு வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிச் செய்ய, ‘outreach’ திட்டங்களை அதிகரிக்கும் கடப்பாட்டையும் டத்தோ சிவராஜ் உறுதிபடுத்தினார்.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரசாங்க வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளிப்புக் கூட்டங்களும் அவற்றில் அடங்கும்.
மாற்றுத்திறனாளிகளை அரசாங்க வேலைக்கு எடுப்பது குறித்தும் SPA-வுடனான சந்திப்பில் சிவராஜ் எழுப்பினார்.
தகுதிப் பெற்ற மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு எடுக்கும் முறையை மேலும் மேம்படுத்த வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.