
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-29 – வரி செலுத்தப்பட்டிருந்தால், பொது மக்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வீட்டில் மதுபானங்களைச் சேமித்து வைக்கலாம் என சுங்கத் துறை கூறியுள்ளது.
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலிருந்து தங்கள் சொந்த பயன்பாட்டுக்காக, வரி செலுத்தப்பட்ட மதுபானங்களை வாங்கினால், மக்கள் பதிவேட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
அத்தகையப் பதிவுகளை 7 ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டிய தேவை, உரிமம் வைத்திருப்பவர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமே என அது கூறியது.
தனிப்பட்ட பயன்பாட்டுக்காக சேமித்து வைக்கப்பட்ட மதுபானங்களைப் பொறுத்தவரை, சுங்கத் துறையின் நிர்வாகச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பாட்டில்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.
இருப்பினும், நாடு முழுவதும் வீடுகளில் சோதனை நடத்தியதில், இவ்வாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை வரி செலுத்தப்படாத 1.42 மில்லியன் ரிங்கிட் மதுபான பாட்டில்களை அத்துறை பறிமுதல் செய்துள்ளது.
மதுபானங்களை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு வளாகமும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; அவ்வகையில், பெரும்பாலும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது வாங்கி சேர்க்கப்பட்ட 30 அல்லது 40 பாட்டில்கள் வரையிலான மதுபானங்களை, உரிமம் இன்றி வீட்டில் வைக்க அனுமதிக்கப்படாது என்றும் சுங்கத் துறை உதவி இயக்குநர் வி. கமல்ஹாசன் கூறியிருந்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
எனினும், துணை நிதியமைச்சர் லிம் ஹுய் யிங், உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கப்பட்டு, விற்பனைக்கு அல்லாமல், தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வைத்திருந்தால், வரி செலுத்தும் மதுபானங்களை வீட்டில் வைத்திருக்க எந்த உரிமமும் தேவையில்லை என பின்னர் தெளிவுப்படுத்திருந்தார்.