
ஜித்ரா, நவம்பர்-29, கெடா, ஜித்ராவில் பிடிவாதமாக வெள்ள நீரை கடந்துசெல்ல முயன்ற மோட்டார் சைக்கிளோட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து பொதுமக்களால் காப்பாற்றப்பட்டார்.
மாலாவ், கம்போங் மங்கோலில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அங்கிருந்த ஆடவர்கள், “ஆபத்து, போக வேண்டாம்” என தடுத்தும் கேட்காமல் மோட்டார் சைக்கிளோட்டி வெள்ளத்தில் சென்றார்.
சிறிது தூரத்தில், வெள்ள நீரின் அழுத்தத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அவ்வாடவரும் கீழே விழுந்தார்.
எனினும், ஏற்கனவே எச்சரித்து விட்டு அங்கு நின்றிருந்த ஆடவர்கள் விரைந்து செயல்பட்டதில், மோட்டார் சைக்கிளோட்டி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படுவதிலிருந்து தப்பினார்.
வெள்ள நீரில் விழுந்தவரை, அவ்வாடவர்கள் கைகளைப் பிடித்து இழுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது.