மூவார், செப்டம்பர்-13, ஜோகூரில், ஆரம்பப் பள்ளி மாணவியை வீடியோ எடுத்து டிக் டோக்கில் பதிவேற்றியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ‘Abang Bas’, வரும் ஞாயிறன்று ஜாமீனில் வெளியே வருகிறார்.
மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் பத்து பஹாட் செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயித்த மொத்த ஜாமீன் தொகையான 40,000 ரிங்கிட்டை, அவ்வாடவரின் குடும்பம் ஒரு வழியாக திரட்டியிருப்பதே அதற்குக் காரணம்.
இன்றும் நாளையும் ஜொகூரில் வார இறுதி விடுமுறை என்பதால், ஞாயிற்றுக் கிழமை குடும்பத்தார் ஜாமீன் தொகையைச் செலுத்துவர் என, அந்நபரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட 24 வயது இளைஞருக்கான ஜாமீன் தொகையைத் திரட்டுவதற்காக, அவரின் அக்காள் முன்னதாக சமூக ஊடகங்களில் பொது மக்களிடம் நன்கொடை கோரியிருந்தார்.
இந்நிலையில், போதுமான நிதி திரட்டப்பட்டு விட்டதாகவும், நன்கொடையளித்த மலேசியா, சிங்கப்பூர், இந்தோனீசியா, மியன்மார் மக்களுக்கு நன்றி என்றும், அம்மாது இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
4 மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு உடல் ரீதியான மற்றும் உடல் ரீதி அல்லாத பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அந்நபர் முதல் 2 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.
9 வயது சிறுமியிருந்த வீடியோவில் அநாகரீகமான வாசகத்தை வைத்ததாக நேற்று மற்றொரு குற்றச்சாட்டுக்கும் சுமத்தப்பட்டது.
முதலிரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 30,000 ரிங்கிட்டும், மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 10,000 ரிங்கிட்டும் ஜாமீன் தொகையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.