
வாஷிங்டன், மார்ச்-25-ஈரானுடன் தற்போது அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
“போரில் நாம் வெற்றி பெற்றோம்” என்றும், ஈரான் இப்போது தான் “புத்திசாலித்தனமாக பேசுகிறது” என்றும் அவர் கூறினார்.
“போர் தொடங்கியதன் நோக்கத்தை அடைந்து விட்டோம்; ஆட்சியை மாற்றி விட்டோம். இப்போது சரியானவர்களுடன் பேச்சு நடத்துகிறோம்” என வாஷிங்டனில் அவர் பேசினார்.
முதலில் முதல் கட்டத் தலைவர்களையும், பின்னர் இரண்டாம் கட்டத் தலைவர்களையும் வீழ்த்தி விட்டதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், தற்போது ஈரானின் மூன்றாம் கட்ட தலைவர்களுடன் பேசி வருவதாகச் சொன்னார்.
“போரை முடித்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ‘அவர்கள்’ தீவிரமாக உள்ளனர்”…
…என்றாலும், யாரையும் நம்ப தாம் தயாராக இல்லை என முன்னெச்சரிக்கையாகவே அவர் பேசினார்.
இவ்வேளையில், இந்த போரில் தனது வளைகுடா பங்காளிகளான கட்டார், ஐக்கிய அரபு சிற்றரசு, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் பங்களிப்பையும் ட்ரம்ப் பெரிதும் பாராட்டினார்.
வாஷிங்டனுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெஹ்ரான் கூறி வரும் நிலையில், ட்ரம்ப்பின் இப்பேச்சு வெளியாகியுள்ளது.
முன்னதாக, Hormuz நீரிணையைத் திறக்க ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த ட்ரம்ப், திடீரென தாக்குதல்களை 5 நாட்கள் ஒத்தி வைத்து, இப்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் கூறுவது….ஒருவேளை வளைகுடா நெருக்கடி முடிவுக்கு வருகிறதோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.



