
போர்டிக்சன், அக்டோபர்-27, போர்டிக்சன் கடற்கரைகளில் வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையே பிரச்னையாக உருவெடுத்திருந்த நீல நிற கூடார வாடகைத் தொழில், நவம்பர் 18-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது.
தெலுக் கெமாங் கடற்கரை, தஞ்சோங் பீ’ரு கடற்கரை, ச்செர்மின் கடற்கரை உள்ளிட்ட கடற்கரைகளை அந்த உத்தரவு உட்படுத்தியுள்ளது.
மாவட்டத்திலுள்ள கடற்கரைகளில் கூடார விற்பனையை மேம்படுத்தும் நடவடிக்கையாக போர்டிக்சன் நகராண்மைக் கழகம் MPPD வெளியிட்ட அந்த நோட்டீஸ் உத்தரவு சமூக ஊடகங்களிலும் வைரலாகியுள்ளது.
குறிப்பிட்ட தேதிக்குள் வியாபாரத் தளங்களில் அனைத்துக் கூடாரங்களும், மேசை நாற்காலிகள், நிழற்குடை, சேமிப்புக் கிடங்கு போன்ற உபகரணங்களும் துப்புரவு செய்யப்பட வேண்டும்.
தெலுக் கெமாங்கில் அந்த நீல நிற கூடாரங்களை வாடகைக்கு விடும் நடவடிக்கையால், உல்லாசத்தலம் என்ற போர்டிக்சன் கடற்கரையின் பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அவ்வுத்தரவுக்கான காரணங்களின் ஒன்றாக MPPD பட்டியலிட்டுள்ளது.
அதோடு, வியாபாரிகளில் சிலர், கடற்கரையைப் பயன்படுத்துவதிலிருந்து பொது மக்களை விரட்டியடிக்கும் செயலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.
நவம்பர் 18-க்குப் பிறகும் கடற்கரையில் மேற்கண்ட பொருட்கள் தொடர்ந்து காணப்பட்டால், அவை நகராண்மைக் கழகம் அழித்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
போர்டிக்சன் கடற்கரையில் வரிசையாகப் போடப்பட்டுள்ள நீல கூடாரங்களால் அதன் அழகே கெட்டு விட்டதாக பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.