புக்கிட் மெர்தாஜாம், ஜனவரி-10, சமூக ஊடகங்கள் குறிப்பாக டிக் டோக்கில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் போலி மின்சாரப் பொருட்களின் சேமிப்புக் கிடங்கில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக முத்திரைக் காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனத்தின் புகாரின் பேரில், KPDN எனப்படும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் பினாங்குக் கிளை அச்சோதனையில் இறங்கியது.
அதில், அரைக்கும் இயந்திரம், தலைமுடியை உலர்த்தும் கருவி, சவரம் செய்யும் கருவி, பல் துலக்கும் மின்னியல் பிரஷ் உள்ளிட்ட 572 போலி மின்சாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அவற்றின் மதிப்பு சுமார் 27,300 ரிங்கிட் என பினாங்கு KPDN இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.
2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தை மீறி சட்டவிரோதமாக வர்த்தக முத்திரைகளைப் பயன்படுத்தியன் பேரில் அவையனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அக்கிடங்கின் பணியாளரான 40 வயது பெண் விசாரணைக்காகக் கைதானார்.
சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் சீன நாட்டு பிரஜை என தெரியவந்துள்ளது.
அவரை நேரில் பார்த்ததில்லை என்றும் இணையம் வாயிலாகவே அவருடன் தொடர்புகொண்டு, அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றி வந்ததாக அப்பெண் விசாரணையில் கூறியுள்ளார்.