
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-2 – புக்கிட் மெர்தாஜாம், துவான்கு பைனூன் வளாக ஆசிரியர் கல்விக் கழகத்தின் தமிழ் ஆய்வியல் துறையின் ஏற்பாட்டில் “பைனூன் கோலிவூட்” குறும்படப் போட்டி பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பரிசளிப்பு விழாவை துவான்கு பைனூன் வளாகத் துணை இயக்குநர் முனைவர் முர்நிசா இப்ராஹிம் சிறப்புரையாற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
சிறப்பு முகாமையராக மலேசியக் குற்றத் தடுப்பு அறவாரியத்தின் ஆட்சிமன்ற உறுப்பினரும், பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ கா. புலவேந்திரன் கலந்து கொண்டார்.
அவர் தமதுரையில் “இதுபோன்ற போட்டிகள் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாகும். மேலும், இனிவரும் போட்டிகளில் போதைப் பொருள்,குண்டர் கும்பல் குடி பழகத்தினால் உண்டாகும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வையும் மையமாகக் கொண்டு குறும்படமாக உருவாக்கலாம்” என பரிந்துரைத்தார்.
மாணவர்கள் தங்களது ஆழமான எண்ணங்களையும் ஆக்கத்திறனையும் வெளிப்படுத்தும் வகையில் 15 சிறப்பான குறும்படங்கள் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டதாக தமிழ் ஆய்வியல் துறையின் தலைவர் மணிமாறன் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் தலைமை நீதிபதியாக நாடறிந்த எழுத்தாளர் கே. பாலமுருகன் பணியாற்றினார்.
குறும்படம் என்பது ஒரு காட்சிமயமான இலக்கிய வடிவம் என்பதனை வலியுறுத்திய அவர், “காட்சிகளின் வழியாகக் கதையைச் சொல்ல வேண்டும். வசனங்களை முடிந்த வரையில் குறைத்துக் கொள்வது சிறப்பு” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்குத் தமிழ் ஆய்வியல் துறையின் விரிவுரையாளரும் ஒருங்கிணைப்பாளருமான மாரிமுத்து புண்ணியசீலன் வழிகாட்டி விரிவுரையாளராகச் செயல்பட்டார்.