
ஜோகூர் பாரு, டிசம்பர்-9, ஜோகூர் பாரு மற்றும் இஸ்கண்டார் புத்ரியில் மேற்கொள்ளப்பட்ட Op Noda சிறப்பு சோதனை நடவடிக்கைகளில், பல்வேறு குற்றங்களுக்காக 189 பேர் கைதாகினர்.
வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று வரை 6 சோதனைகள் நடத்தப்பட்டதில் கைதானவர்களில், 177 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
கேளிக்கை மையங்களில் விபச்சாரம், GRO எனும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் ரீதியிலான சேவை, மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை முறியடிப்பதே அச்சோதனைகளின் நோக்கமென, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் தெரிவித்தார்.
கைதான மொத்தப் பேரில், 161 வெளிநாட்டுப் பெண்கள் ஆவர்;
தொடக்கக் கட்ட சிறுநீர் பரிசோதனையில் 16 உள்ளூர் ஆடவர்களும் 12 வெளிநாட்டு பெண்களும் போதைப்பொருள் உட்கொண்டதும் உறுதியானது.
கைப்பேசிகள், கட்டண இரசீதுகள், ஒலிப்பெருக்கிகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் 2,510 ரிங்கிட் ரொக்கமும் விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வேளையில், கடந்த ஜனவரி முதல் நேற்று வரை மாநிலம் முழுவதும் கேளிக்கை மையங்களைக் குறி வைத்து ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறை 388 சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
அவற்றில் மொத்தமாக 1,699 வெளிநாட்டவர்கள் உட்பட 1,910 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைதானதாக டத்தோ குமார் சொன்னார்.