மகப்பேறுக்கு பிந்தைய சிறப்பு உதவித்தொகை: தாய்மார்களுக்காக பிரதமர் அன்வாரின் புதிய அறிவிப்பு

புக்கிட் ஜாலில், மே-1,பிரசவத்திற்குப் பிறகு பணிக்குத் திரும்பும் தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில், ‘மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை’ (Post-Maternity Leave Allowance) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் பிரசவத்திற்குப் பின் பொருளாதார நெருக்கடியின்றி தங்களது பணியைத் தொடருவதை உறுதிச் செய்யவும், அவர்கள் வேலை சந்தையிலிருந்து விலகிச் செல்வதைத் தவிர்க்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
இன்று கோலாலம்பூர் புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற தொழிலாளர் தினக் கொண்டாட்ட உரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
பெண்கள், குறிப்பாக 25 முதல் 39 வயதிற்குட்பட்டவர்களின் வேலைவாய்ப்புப் பங்கேற்பு விகிதம் சற்று குறைந்துள்ளதையும், மகப்பேறு கடமைகள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இதனைக் கருத்தில் கொண்டு, மகப்பேறு விடுமுறைக்கு பிறகு பணிக்குத் திரும்ப கூடுதல் அவகாசம் தேவைப்படும் தாய்மார்களுக்குக் கூடுதல் நிதி உதவி வழங்கும் நோக்கில், ‘2017 வேலைவாய்ப்பு காப்பீட்டு முறைச் சட்டம் திருத்தப்பட்டு, இந்த உதவித்தொகை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, அண்டை நாடுகளில் பணிபுரியும் மலேசியத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் வகையில், PERKESO தனது பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது.
இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
இதன் மூலம் சிங்கப்பூர், புருணை போன்ற நாடுகளில் பணிபுரியும் 480,000 மலேசியர்கள் விபத்து அல்லது உடல்நலக் குறைவின் போது உரியப் பாதுகாப்பைப் பெற வழிவகை செய்யப்படும் என அன்வார் சொன்னார்.
இவ்வேளையில், நாட்டின் தொழிலாளர் சந்தையை வலுப்படுத்த RM710 மில்லியன் மதிப்பிலான ‘PACE’ (Progressive Acceleration for Capability and Employment) எனும் புதியப் பொருளாதார பேக்கேஜையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 2.9 விழுக்காடாகக் குறைந்துள்ள நிலையில், தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தவும், வேலை இழந்தவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இதன் கீழ் PERKESO காப்பீடு மற்றும் பயிற்சித் திட்டங்கள் பலப்படுத்தப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அதோடு, கிக் தொழிலாளர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில், PTPK எனப்படும் திறன் கல்வி நிதிக் கழகத்துக்கு 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சொன்னார்.
பெண்கள் மற்றும் அனைத்துத் துறை தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் இந்த அறிவிப்புகள், மலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
‘Pekerja MADANI, KESUMA Bangsa’ என்றக் கருப்பொருளில் நடைபெற்ற இன்றையத் தொழிலாளர் தினக் கொண்டாட்டத்தில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.



