
ஷா ஆலாம், செப்டம்பர்-21,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி கொள்கை, மலேசியர்களை ஒன்றிணைக்கச் சிறப்பாக செயல்படுவதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அனைத்துச் சமூகங்களும் பின்தங்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் இந்தக் கொள்கை, பாஸ் கட்சியையும் இந்தியர்களுடன் தொடர்பு கொள்ள தூண்டி வருவதாக அவர் சொன்னார்.
முன்பு Hudud இஸ்லாமியச் சட்டத்தை அமுல்படுத்தும் பேச்சிலேயே கவனம் செலுத்திய பாஸ், இப்போது இந்தியர்களின் பிரச்னைகளில் குரல் கொடுத்து, இந்தியக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கும் முயற்சி செய்கிறது.
இது, மாறி வரும் அரசியல் சூழலில் வேறு வழியில்லாமல் பாஸ் எடுத்துள்ள ஒரு நிர்ப்பந்தமான முடிவே; என்றாலும் அனைவரையும் அரவணைக்கும் மடானி கொள்கை மக்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இதுவும் ஒரு சான்றே என ரமணன் குறிப்பிட்டார்.
இது மடானியின் வலிமையை காட்டுவதாகவும், மலாய், சீனர், இந்தியர், டாயாக், கடசான், ஈபான் ஆகிய பல்லின மக்களை ஒருங்கிணைக்கக் கூடியது எனவும் துணையமைச்சர் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் காணாமல் போவதைத் தவிர்க்க, கட்சிகள் இது போல் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாதையை பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் எச்சரித்தார்.
சிலாங்கூரில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாடு மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய போது அவர் அவ்வாறு சொன்னார்.