
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.
மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மரண விபத்துகளைத் தடுக்க, நடப்பிலுள்ள தண்டனைகள் போதுமானதாக இல்லை; கடுமையான தண்டனைகள் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகைய விபத்துகளைத் தடுக்க உதவும் என்றார் அவர்.
நேற்று கிள்ளானில் நிகழ்ந்த சாலை விபத்தில், 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
மது மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் எதிர்திசையில் புகுந்து காரோட்டிய 20 வயது இளைஞர் வேகமாக மோதித் தள்ளியதில், அந்த மோட்டார் சைக்கிளோடி மற்றொரு காரின் மேல் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து அந்தக் காரோட்டி கைதாகி விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
வாகனமோட்டியின் பொறுப்பற்ற போக்கால், இப்படி வீணாக உயிர் பலி ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இதுபோல், மதுபோதையில் வாகனமோட்டிகளுக்கு எதிராக மிக மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்ற குரல் மீண்டும் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.



