
கோலாலாம்பூர், ஜூலை-28-
ம.இ.காவைக் குறைக் கூறியுள்ள DAP சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் ஒரு சந்தப்பவாதியென, அதன் இளைஞர் பிரிவு கடுமையாக சாடியுள்ளது,
துளசியின் அறிக்கை, ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி நோயால்’ அவர் பாதிக்கப்பட்டிருப்பதை காட்டுவதாக ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அரவிந்த் கிருஷ்ணன் காட்டமாகக் கூறினார்.
“ஏமாற்றப்பட்டதாக உணருகிறீர்களா? ஒன்று செயலாற்றுங்கள், அல்லது வெளியேறுங்கள், இனியும் புலம்பல் வேண்டாம்!” என்ற தலைப்பில் துளசி ம.இ.காவை விமர்சித்துள்ளார்.
இப்படி மற்றவரை விமர்சனம் செய்வதற்கு முன் அவர் முதலில் கண்ணாடியைப் பார்க்க வேண்டும்; காரணம் DAP அள்ளி வீசிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோனதை அவர் மறந்திருப்பார் போலும்.
UEC படிப்புக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவோம், எரிபொருள் விலைக் குறைப்பு, PTPTN மறுசீரமைப்பு, கறுப்புப் பட்டியலை நீக்குவோம் என வானளவுக்கு பக்காத்தான் ஹராப்பான் வழங்கிய வாக்குறுதிகள் இன்று இருக்கும் இடம் தெரியவில்லை.
இது மட்டுமா? இளையோருக்கு 1 மில்லியன் வேலை வாய்ப்புகளையும், வாழ்க்கைச் செலவினத்தைக் குறைத்துத் தருவதாகவும் DAP முழக்கமிட்டது. ஆனால் அதில் ஒன்றுமே நடக்கவில்லை.
தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாடு, நாடற்றவர்கள் பிரச்னை, சமமான உதவிகள் என எதிலுமே உண்மையானத் தீர்வுகளை ஏற்படுத்துவதில் DAP செயலாற்றவில்லை; இந்துக்களை இழிவுப்படுத்திய சம்ரி வினோத் விஷயத்தைக் கையாள்வதிலும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலும் அக்கட்சி தோல்வி கண்டுள்ளது.
சட்டத் துறை துணையமைச்சர் பதவி கைவசம் இருந்தும், உருப்படியாக ஒரு நடவடிக்கையையும் அக்கட்சி எடுக்கவில்லை.
ஆனால், ம.இ.கா அப்படி அல்ல; ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், சமூகத்துக்காகத் தொடர்ந்து போராடி வருகிறது.
குறிப்பாக, கல்வி உபகாரச் சம்பளம், சட்ட உதவி, திறன் பயிற்சி, கோயில்களுக்கான ஆதரவு மற்றும் இளைஞர் திட்டங்கள் மூலம் ம.இ.கா உண்மையாக சேவையாற்றி வருகிறது.
துளசி போல், சமூகக் கட்டமைப்பை மேம்படுத்துவதை விட பொதுவெளி விமர்சனத்தில் ஈடுபடும் கட்சி நாங்கள் அல்ல அர்விந்த் சொன்னார்.
“எங்கள் பணி எப்போதும் சத்தமாக இருக்காது, ஆனால் அது நிலையானது மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும். சமூகத்திற்கு ஒற்றுமை மற்றும் தலைமை தேவைப்படும் நேரத்தில், துளசியின் பேச்சும் செயலும் பிளவுபடுத்தும் வகையில் முதிர்ச்சியின்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறது” என அர்விந்த் சாடினார்.
அமைச்சரவையில் இடம் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டதால், இனியும் ஏமாற விரும்பவில்லை என, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் கூறியிருந்ததை விமர்சித்து துளசி முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.