
மலாக்கா, ஜூன்-11 – மலாக்கா, Pokok Mangga-வில் ஒரு கடைவீட்டு குடியிருப்பில், தனது நண்பனைக் கொலைச் செய்து, அவரது உடலை மெத்தையில் சுருட்டி இரண்டு மாதங்களாக மறைத்து வைத்திருந்த 40 வயது வேலையில்லா ஆடவர் மீது, இன்று ஆயர் குரோ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Kamil Harris Mohd Abd Nasir என்ற அந்நபர், கடந்த மார்ச் மாதம் 30-ஆம் தேதி இரவு, தனது நண்பரைக் கொலைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனினும், கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், அவரின் ஒப்புதல் வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 28-ஆம் தேதி, அந்தப் பூட்டப்பட்ட வீட்டின் உரிமையாளர் சோதனை செய்தபோதுதான், கைகள் கட்டப்பட்ட நிலையில் மெத்தையில் சுருட்டப்பட்டு முற்றிலும் அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.



