
கோலாலம்பூர், அக்டோபர்-12,
மலாக்கா, அலோர் காஜாவில் மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையிலேயே சீனியர் மாணவர்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து, ம.இ.கா பிரிகேட் கடும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தெரிவித்துள்ளது.
பள்ளி வளாகத்தினுள்ளேயே ஒழுங்கீனத்தில் ஈடுப்பட்ட அந்த சீனியர் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, பிரிகேட் தலைவர் அண்ட்ரூ டேவிட் வலியுறுத்தினார்.
அதுவும் பள்ளி நேரத்தில் நிகழ்ந்துள்ள இக்கொடூரம், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, பள்ளி நிர்வாகம் இதில் முழு பொறுப்பேற்க வேண்டும்; அதோடு, பாதுகாப்பு அம்சங்கள், கண்காணிப்பு மற்றும் கட்டொழுங்கு நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
பாலியல் குற்றங்கள் அதுவும் கல்வி நிறுவனங்களில் அவை நடப்பதை கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்ய வேண்டுமென அண்ட்ரூ கேட்டுக் கொண்டார்.
இவ்வேளையில் வைரலான சம்பவ வீடியோவை பகிர வேண்டாம் என்றும் பொது மக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
குற்றமிழைத்தவர்கள் நீதியின் முன் கடுமையாக தண்டிக்கப்பட ஏதுவாக, இலவச சட்ட உதவிகளை வழங்கவும் பிரிகேட் முன் வந்துள்ளது.
பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிகாரத் தரப்பு, பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டிய நேரம் வந்திருப்பாக அறிக்கை வாயிலாக அவர் சொன்னார்.
நாட்டையே உலலுக்கியுள்ள அக்கொடூர சம்பவம் தொடர்பில் 4 SPM மாணவர்கள் கைதாகி, 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.