
மலாக்கா, ஜூலை-28,நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, இந்து சமூகத்தின் தேவைகள் மற்றும் கவலைகளை நிவர்த்தி செய்வதே, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் (MAHIMA) பணியாகும்.
அவ்வகையில், roadshow முறையில் நாடளாவிய நிலையில் ஆலய நிர்வாகத்தினர்களை அது சந்தித்து வருகிறது.
அந்த வரிசையில் அண்மையில் மலாக்காவில் மஹிமா நடத்திய roadshow சந்திப்புக் கூட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றது.அதன் தலைவர் டத்தோ என். சிவகுமார் அது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.
மலாக்கா ஸ்ரீ சுப்ரமணியர் துரோபதை அம்மன் ஆலய பரிபாலன சபாவில் அச்சந்திப்பு நடைபெற்றது;
அதில் 70 ஆலயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றது, ஒன்றிணைந்து செயல்படுவதில் அவர்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தியதாக சிவகுமார் சொன்னார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சமூக சவால்களை எதிர்கொள்வது மற்றும் இந்து சமூகத்தின் வளர்ச்சிக்கான ஒரு பகிரப்பட்ட பார்வையை உருவாக்குவது குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த ஒற்றுமை மனப்பான்மை மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திய ஆலய நிர்வாகத்தினருக்கும் பங்கேற்பாளர்களுக்கும் சிவகுமார் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக, இளைஞர் – விளையாட்டுத் துறைக்கான மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் நேரம் ஒதுக்கி கூட்டத்தில் பங்கேற்றதற்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
புதிதாக பதிவுப் பெற்ற ஆலயங்களுக்கு மஹிமா உறுப்பினர் சான்றிதழ்களும் அந்நிகழ்வில் வழங்கப்பட்டன; இது மஹிமா கட்டமைப்பின் கோயில்களுக்கு இடையேயான வலுவான ஒத்துழைப்பைக் குறிப்பதாக சிவகுமார் தெரிவித்தார்.