
ஜோகூர் பாரு, ஏப்ரல்-25, வரும் ஏப்ரல் 28, திங்கட்கிழமை ஜோகூரில் சம்பவ விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு JDT தகுதிப் பெற்றிருப்பதை கொண்டாடும் வகையில், அவ்விடுமுறை வழங்கப்படுகிறது.
ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் இப்ராஹிம் அவர்களின் ஆணைக்கேற்ப அம்முடிவு அமைவதாக, மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி கூறினார்.
மலேசியா மட்டுமின்றி ஆசிய வட்டாரத்திலும் மதிக்கப்படும் கிளப்பாக JDT-டை உருமாற்றியப் பெருமை TMJ-வுக்கே சேரும் என்றும் டத்தோ ஓன் புகழாரம் சூட்டினார்.
இறுதியாட்டத்திற்கு முன்னேறிய JDT-க்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் அவர் சொன்னார்.
நாளை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் பஹாங்குடன் JDT மோதுகிறது.
2017, 2019, 2022, 2023 என 4 முறை மலேசியக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட JDT, ஐந்தாவது முறையாக வாகை சூடும் வேட்கையோடு நாளையிரவு களமிறங்குகிறது.
எனவே ‘தென் சிங்க’ அணிக்கு வற்றாத ஆதரவை வழங்க புக்கிட் ஜாலில் அரங்கை நிரப்புவோம் என JDT இரசிகர்களுக்கு அவர் அறைகூவல் விடுத்தார்.
அதே சமயம் ஞாயிறு இரவு பெரும் கொண்டாட்டத்திற்காக இஸ்கண்டார் புத்ரியில் உள்ள சுல்தான் இப்ராஹிம் அரங்கிலும் திரளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்