
புத்ராஜெயா, அக்டோபர்-12,
மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC மற்றும் இளைஞிகள் – விளையாட்டுத் துறை அமைச்சு இணைந்து 2025 மலேசிய இந்திய இளைஞிகள் மாநாட்டை இன்று புத்ராஜெயாவில் உள்ள ஸ்ரீ எண்டோன் மண்டபத்தில் நடத்தியது.
தேசிய அளவிலான இம்மாநாட்டில், நாடு முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்ட இந்திய பெண் இளைஞர்கள் பங்கேற்றனர்.
அவர்களை ஒன்றிணைத்து, தலைமைத்துவத் திறன், வியூகக் கட்டமைப்புத் திறன்களை மேம்படுத்துவதை இம்மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநாட்டில் “வழக்கமான கண்ணோட்டத்தை முறியடித்து வலிமையை கட்டமைக்கலாம்” என்ற சிறப்புரை மற்றும் “பொதுச் சேவைத் துறையே மலேசிய மடானியின் முதுகெலும்பு” என்ற தலைப்பில் இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ தலைமையில் நடந்த விவாதம் உள்ளிட்ட பல ஊக்கமளிக்கும் அமர்வுகள் இடம்பெற்றன.
ஹானா இயோவுடன் அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ Dr நகுலேந்திரன் கங்கைட்கராசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டரசு நீதிமன்ற நீதிமதி தான் ஸ்ரீ நளினி பத்மநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு, பிரபல இயக்குநர் Dr விமலா பெருமாள், நடிகை பாஷினி உள்ளிட்டோரும் ஆய்வரங்கில் பங்கேற்றனர்.
அதேபோல் இளைஞர் அமைப்புகள், தொழில்முனைவோர் மற்றும் பல்கலைக்கழக பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர்.
மாநாட்டில் ரக்கான் மூடா மற்றும் பெண் தொழில்முனைவோர் கண்காட்சியும் இடம்பெற்றது.
இது, தீபாவளிக்கு முன் பெண்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் மேடையாகவும் அமைந்தது.
மலேசிய மடானி அரசின் பெண்கள் முன்னேற்றக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இம்மாநாட்டை, வருடந்திர நிகழ்வாகத் தொடர MIYC இலக்குக் கொண்டுள்ளது.