
ஜோகூர் பாரு, பிப் 24 – சுவாமி விவேகானந்தரின் 162ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவையின் இளைஞர் பிரிவு மிகச் சிறப்பாக நடத்திய இரத்த தான முகாம், சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
முத்தியாரா ரினி மைதீன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு மைதீன் மால், எச்.எஸ்.ஏ மருத்துவமனை மற்றும் யயாசான் பிஜாயாங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆதரவு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 114 பேர் இரத்த தானம் செய்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவையின் தலைவர் தொண்டர்மணி க. சேகரன் தெரிவித்தார்.
இந்த இரத்ததான நிகழ்வு வெற்றியடைவதற்கு பல்வேறு சமூகங்களின் உறுதுணை மிகச் சிறப்பாக இருந்ததோடு ,இதுபோன்ற நடவடிக்கை சமூகத்தில் நன்மையை கொண்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் கோத்தா இஸ்கண்டார் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பாண்டா, யாயாசான் பிஜாயாங் இஸ்கண்டார் புத்ரி உறுப்பினர் புவான் அசிசா, மஇகா இஸ்கண்டார் புத்ரி தொகுதி செயலாளர் திரு விஜயன் மற்றும் அவரது துணைவியார் திருமதி பத்மாவதி உட்பட பலர் கலந்துகொண்டு இரத்த தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்நிகழ்வின் மூலம், அனைத்து சமூகத்தினரும் நோயாளிகளின் வாழ்வைப் பாதுகாக்கும் நலத்திட்டத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றியதாக மலேசிய இந்து சங்கம் இளைஞர் பகுதி தலைவர் திரு. செல்வேந்திரன் பெருமகிழ்ச்சியுடன் கூறினார்.