
கோலாலம்பூர், மார்ச்-25- ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம், அருகிலுள்ள இடத்திற்கு மாறிச் செல்ல இணங்கியுள்ளது.
கோலாலாம்பூர் மாநகர மன்றம் DBKL-லுடனான கலந்தாய்வு மற்றும் பேச்சுவார்த்தைகளின் பலனாக அம்முடிவு எட்டப்பட்டதாக, ஆலயத்தின் செயலாளர் கார்த்திக் குணசீலனை மேற்கோள் காட்டி, மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள அப்புதிய இடம், மஸ்ஜித் இந்தியா சாலைக்குட்பட்ட பகுதியிலேயே, ஆலய இடமாற்றத்திற்கு பொருத்தமான இடமாக இருப்பதாக அவர் சொன்னார்.
இந்த சுமூகத் தீர்வு எட்டப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் பெருமக்கள், மக்கள் பிரதிநிதிகள், மாநரக மன்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்துக்களின் நம்பிக்கையை மதிக்கும் வண்ணம் நல்லிணக்க உணர்வோடு அக்கோயில் ஒரு பொருத்தமான இடத்திற்கு மாற்றப்படும் என முன்னதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மார்ச் 27-ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மடானி மசூடியின் அடிக்கல் நாட்டு விழாவில் டத்தோ ஸ்ரீ அன்வார் பங்கேற்கிறார்.
மஸ்ஜித் இந்தியாவில் உள்ள மசூதிகளில் இட நெருக்கடி நிலவுவதால் அங்கு புதிய மசூதியைக் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் முன்னதாக விளக்கியிருந்தார்.
DBKL, ஆலய நிர்வாகம் மற்றும் நில உரிமையாளரான Jakel குழுமம் என முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் பலனளித்திருப்பதால், கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த சர்ச்சைகளும் முடிவுக்கு வருகின்றன.