
கோலாலம்பூர், ஜூலை-14 – Jalan Gallagher பகுதியில் சாலையோரங்களில் குப்பைகள் வீசப்பட்டிருந்தது மற்றும் கால்வாய் அடைப்பு உள்ளிட்ட பிரச்னை தொடர்பில், கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சனிக்கிழமைக் காலை அங்கு நடைப்பயணம் மேற்கொண்ட மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், சுற்றுப்புறத் தூய்மை குறித்து கண்டித்த பிறகு, சுறுசுறுப்பாக வேலை நடைபெற்று முடிந்துள்ளது.
அவ்வகையில், குரங்குகள் உணவுத் தேடி சாலைகளுக்கு வரக் காரணமாக இருந்த தற்காலிகக் குப்பைத் தொட்டிகள் மூடப்பட்டுள்ளன; கால்வாய்களில் அடைப்பு எடுக்கப்பட்டுள்ளது; புற்கள் வெட்டப்பட்டு புதர்ப்பகுதிகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ள; சாலையோரங்களில் விழுந்துகிடந்த மரக்கிளைகள் அகற்றப்பட்டன; சாலையை மறைக்கும் வண்ணம் தொங்கிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு, சாலைகளும் கழுவப்பட்டுள்ளன.
கோலாலம்பூரின் ஊராட்சித் துறை என்ற வகையில் முழு பொறுப்புடன் அங்குத் துப்புரவுப் பணிகளை முடித்திருப்பதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் DBKL குறிப்பிட்டது.
அப்பகுதி எப்போதும் தூய்மையாக இருப்பதை உறுதிச் செய்ய, SWCorp மற்றும் Alam Flora கழிவு மேலாண்மை தரப்புகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் DBKL கூறிற்று.
அப்பகுதியில் காட்டுக் குரங்குகளின் அட்டகாசத்தைக் கையாள, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னுடன் ஒத்துழைத்து வருகிறது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் Jalan Gallagher சாலையின் தூய்மையை நேரில் கண்காணிக்க முன்னதாக 3.2 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டார்.
அதன் போது கண்ணில் கண்ட காட்சிகள் அவரை முகம் சுளிக்க வைத்தன.
அடைத்துக் கொண்ட கால்வாய்கள், சாலையோரக் குப்பைக் கூளங்கள் போன்றவை குறித்து அவர் கவலைத் தெரிவித்தார்.
எனவே சுற்றுப்புற குடியிருப்பாளர்களுக்கு அவ்விடம் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிச் செய்ய, உடனடி துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.