கோலாலம்பூர், செப்டம்பர் 8 -12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான நிலைத்தன்மை மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி அடைந்துள்ளது.
ஒரு முற்போக்கான கற்றல் மேம்பாட்டுத் திட்டமான இது ஐக்கிய சர்வதேச விருது திட்டத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டதாகும்.
அனைத்துலக இளைஞர் மையம் (IYC) மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (MITRA), பிரதமர் அலுவலகம்(JPM), ஜாஸ் மலேசியா (JASS MALAYSIA) மற்றும் மலேசியக் கல்வி அமைச்சு (KPM) ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுடன் இத்திட்டம் லண்டனிலிருந்து இங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை, MITRA நிதியுதவியுடன் சிலாங்கூர், கோலாலம்பூர், கூட்டரசு பிரதேசம், பேராக், பினாங்கு மற்றும் கெடா போன்ற பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது 20 தமிழ் தேசிய வகைப் பள்ளியில் (SJKT) இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
B40 பிரிவின் கீழ் மொத்தம் 500 மாணவ மாணவியர் பங்கேற்றார்கள்.
6 மாத கால இத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் IYC-JASS அண்மையில் வெண்கல அளவிலான சர்வதேச விருது வழங்கும் விழாவை நடத்தியது.
பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் மித்ரா தலைவருமான பி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில், மாணவர்களுக்கு, கல்வி அமைச்சால் (KPM)தேசிய நிலை பங்கேற்பு பாடத்திட்ட மதிப்பெண்ணும் (PAJSK) வழங்கப்பட்டது.
தலைமையுரையாற்றிய பிரபாகரன், இது போன்ற இளையோர் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட ஏதுவாக, கல்வி அமைச்சுடன் ஒத்துழைக்கப்படுமென்றார்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே.
கல்வி, திறன் தேர்ச்சி, தொழில் ஆகியவற்றில் இந்திய இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்த புத்தாக்க வழிகள் காணப்படும் என்றும் பிரபாகரன் கூறினார்.