
கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – RON95 மானிய இலக்கு பிரச்சினையில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த டான் ஸ்ரீ முகிதீன் யாசினிடம் மன்னிப்பு கேட்பதற்கு தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவுக்காக காத்திருப்பது மிக முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த வாரம், RON95 மானிய விவகாரத்தில் தாம் வெளிநாட்டினரைப் தற்காத்ததாக கூறிய அறிக்கைக்கு அன்வார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முகிதீன் வலியுறுத்தியிருந்தார்.
அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களவையில் பிரதமரை உரிமைகள் மற்றும் சுயேட்சை செயற்குழுவிற்கு பரிந்துரைக்கும் தீர்மானம் கொண்டு வருவேன் என்றும் முகிதீன் எச்சரித்திருந்தார்.
முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் மானிய நன்மைகள் பெறுவதில் வெளிநாட்டினரின் உரிமைகளைப் தற்காக்க முயல்கிறார்கள் என்று தமக்கு தகவல் கிடைத்திருப்பதாக அன்வார் கூறியிருந்தார். ஆனால் முகிதீனை நேரடியாக விசாரிக்க MCMC-க்கு தாம் அறிவுறுத்தவில்லை என்றும், அத்தகவல் உண்மையா என்பதையே தாம் விசாரிக்க கேட்டிருந்ததாகவும் அன்வார் தெரிவித்தார். இதுகுறித்து தவறான புரிதல் ஏற்பட்டுள்ளதாகவும் அன்வார் விளக்கியுள்ளார்.