
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- நாட்டில் பகடிவதை சம்பவங்கள் ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் ஏராளமான பெற்றோர்கள் அச்சத்தில் வாழுகின்றனர்.
குற்றங்களின் கடுமைக்கு ஈடான தண்டனைகள் இல்லாததால் சட்ட அமுலாக்கம் மீதான அவர்களின் நம்பிக்கையும் சிதைந்துபோயிருப்பதாக, Dinamik Sinar Kasih சமூக நல அமைப்பின் தலைவரும் புரவலருமான டத்தோ என். சிவகுமார் கூறியுள்ளார்.
இணைய பகடிவதை உட்பட அனைத்து வகை பகடிவதை சம்பவங்களையும் கடுமையாகவும் விரிவாகவும் கையாள ஏதுவாக, 2025 குற்றவியல் சட்டத் திருத்தமும் 2025 குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தமும் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் கண்டு அமுலுக்கும் வந்துவிட்டன.
அச்சுறுத்துவது, மிரட்டுவது, இழிவுப்படுத்துவது, மனஉளைச்சலை ஏற்படுத்தும் நோக்கில் வசைபாடுவது போன்ற பகடிவதைக் குற்றங்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கவே அத்திருத்தங்கள் செய்யப்பட்டன.
ஆனால், எதற்கும் துணிந்தவர்கள் போல் பகடிவதை செய்பவர்களின் அட்டகாசமும் கொட்டமும் அடங்கவில்லை; சட்டம் திருத்தப்பட்டாலும் அதன் அமுலாக்கம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.
குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பகடிவதை சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் கூட, சபாவில் முதலாம் படிவ மாணவி சாரா கைரினா மரணமும் பகடிவதையுடன் தொடர்புப்படுத்தப்படுகிறது.
எனவே, திருத்தப்பட்ட சட்டங்கள் விரைந்து அதுவும் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்; ஒருவேளை அமுலாக்கத்தில் பலன் இல்லை என தெரிந்தால் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென சிவகுமார் வலியுறுத்தினார்.
முன்பு, சமூக ஊடகப் பிரபலம் ஒருவர் பகடிதையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஒரு குற்றவாளிக்கு வெறும் 100 ரிங்கிட் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டதையும் நாம் மறந்து விடக் கூடாது.
ஆகவே, இந்த பகடிவதைச் சம்பவங்கள் விவேகமாகவும் துல்லியமாகவும் கையாளப்பட்டு, இப்பிரச்னைகளுக்கு நிரந்தரமாக முடிவு கட்டப்பட வேண்டுமென சிவகுமார் கேட்டுக் கொண்டார்.