Latestமலேசியா

முதல் ஒன்பது மாதங்களில் போதைப்பொருள் பறிமுதல் 43.6% அதிகரித்து 2.85 பில்லியன் ரிங்கிட்டை எட்டியது

கோலாலம்பூர், அக்-21-இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாடு முழுவதும் 2.85 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1.98 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் இது 43.63% அதிகமாகும் என கூட்டரசு போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

ஜனவரி முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் 167,601 போதைப்பொருள் தொடர்பான சம்பவங்கள் பதிவாகின. 186,257 பேர் கைது செய்யப்பட்டனர். சிலாங்கூரில் அதிகபட்சமாக 23,195 சம்பவங்களும் 26,368 கைதுகளும் பதிவாகின. அடுத்து கெடாவில் 18,843 சம்பவங்களும், கிளந்தானில் 18,008 சம்பவங்களும் பதிவாகின.

அக்காலகட்டத்தில் 36,612.72 கிலோ திட வடிவிலான போதைப்பொருட்களும், 30,580.19 லிட்டர் திரவ வடிவிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதோடு, நச்சுப் பொருட்கள் சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்படும் 45,382.70 கிலோ மற்றும் 106,092.56 லிட்டர் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக Hussein கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு வழிகளைப் பயன்படுத்திச் செயல்படுவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் விநியோக வலைப்பின்னல்களை முறியடிக்கவும், கடத்தலில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுக்களைக் கண்டறியவும் உளவுத் தகவல்களின் அடிப்படையிலான அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றாரவர்.

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்ள உள்நாட்டு அமலாக்க அமைப்புகள் மற்றும் அனைத்துலகப் பங்காளிகளுடனான ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் Hussein தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!