
முன்நோக்கி நகர்ந்த MPV அதன் உரிமையாளரையே மோதி வீழ்த்தியது; விபத்தில் முதியவர் பலி
சிரம்பான், பிப்ரவரி 24 –
சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த MPV வாகனத்தின் மீது வேறொரு வாகனம் மோதியதால் அது முன்னோக்கி நகர்ந்து சென்று, அந்த MPV வாகனத்தின் உரிமையாளரையே மோதி உயிரிழக்க செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 9.30 மணியளவில், சிரம்பான் செனாவாங் 2 சாலையில் அமைந்திருக்கும் Family Store அங்காடிக்கு அருகே ஏற்பட்ட இவ்விபத்தில் 64 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நேரத்தில், பாதிக்கப்பட்டவர் தனது Toyota Unser வாகனத்தின் முன்புறத்தில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த ‘பெரோடுவா வீவா’ கார் பின்புறத்தில் மோதியதால் MPV முன்நோக்கி நகர்ந்து, அதன் உரிமையாளரையே மோதி வீழ்த்தியது.
இந்த சம்பவத்தில் தலையில் கடுமையான காயம் அடைந்த Toyota Unser ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டேன்ட் கமிஷனர் அசாஹார் அப்துல் ரஹீம் (Assistant Commissioner Azahar Abdul Rahim) தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



