
புத்ராஜெயா, மார்ச்-19-ரமலான் மாதத்தின் அமைதி, பல்லின சமூக ஒற்றுமை உணர்வை முன்னிட்டு, முஸ்லீம் மற்றும் இந்து சமூக பிரதிநிதிகள் ஹர்மோனி மடானி எனும் நிகழ்ச்சியின் வழி நேற்று புத்ராஜெயாவில் முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பு, அனுமதியின்றி கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்கள் உட்பட, அண்மையக் காலமாக ஏற்பட்டுள்ள சில நுணுக்கமான – உணர்ச்சிப்பூர்வமான பிரச்னைகளை அமைதியாகத் தீர்க்கும் நோக்கில் நடைபெற்றது.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடந்த இந்த உரையாடலில், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
“இனி மூன்றாம் தரப்பின் கருத்துக்களை விட, இதுபோல் நேரடியாக உரையாடி தீர்வுகாண வேண்டும்” என மலேசிய முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சைனுல் ரிசால் அபு பாக்கார் வலியுறுத்தினார்.
சுமார் 20 மலாய்-முஸ்லீம் பிரதிநிதிகளும், 10 இந்திய-இந்து பிரதிநிதிகளும் அதில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
“இது ஆரம்ப கட்ட உரையாடல். பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்பு குழுவை அமைத்து, வழிபாட்டு இடங்களுக்கான நில ஆய்வை நடத்த வேண்டும்” என, மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ எ.ன். சிவகுமார் பரிந்துரைத்தார்.
சந்திப்பு 4 மணி நேரம் நீடித்தது.
இதில் பல சமூக ஆர்வலர்கள், மத போதகர்கள், சமூக ஊடகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.அவர்களில் சம்ரி வினோத், ஃபிர்டாயுஸ் வோங்-கும் அடங்குவர். இந்திய சமூகத்தைச் சேர்ந்த சில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என அறியப்படுகிறது.
“யாரோ சிலர் கூறும் கருத்துகளை புறக்கணித்து, அமைதியான – நல்லிணக்கச் சூழலை முன்னெடுக்க வேண்டும்” என இரு தரப்பினரும் உறுதியளித்தனர்.
தற்போது நாட்டில் சில தரப்பினரால் வித்திடப்பட்ட இன-மத சினமூட்டல்களுக்கு மத்தியில், இந்த கலந்துரையாடல் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியமான முதல் படியாகக் கருதப்படுவதாக அதில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்தனர்.



