
சிரம்பான், ஏப்ரல்-25, நெகிரி செம்பிலான் போலீஸ் படையில் பணியாற்றிய போது மூத்த அதிகாரி ஒருவர் மிரட்டி 80,000 ரிங்கிட் பணம் பறித்ததாக எழுந்துள்ள புகார் விசாரிக்கப்படுகிறது.
உள் விசாரணைத் தொடங்கியிருப்பதை, மாநில போலீஸ் தலைவர் அஹ்மாட் ட்சாஃபிர் யூசோஃப் உறுதிப்படுத்தினார்.
விசாரணைக்கு உதவ இதுவரை 3 பேரது வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது வேறொரு மாநிலத்தில் பணியாற்றி வருவதாக அஹ்மாட் டட்சாஃபிர் சொன்னார்.
இந்த மிரட்டிப் பணம் பறிக்கும் வேலைக்கு 2019-ஆம் ஆண்டிலிருந்து தாம் ஆளாகி வந்திருப்பதாக, மாடுகளை விற்பவரான 39 வயது ஆடவர் முன்னதாக ரந்தாவ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இன்ஸ்பெக்டர் ஒருவரின் இடைத்தரகரிடம் முதலில் 50,000 ரிங்கிட்டும் பின்னர் 30,000 ரிங்கிட்டும் புகார்தாரர் கொடுத்துள்ளார்.
குண்டர் கும்பல் ஈடுபாடு தொடர்பில் கைதானவர் SOSMA சட்டத்தின் கீழ் சிக்குவதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அப்பணத்தைத் தர வேண்டுமென மிரட்டப்பட்டுள்ளார்.
விஷயம் வெளியில் தெரிந்தால் சுட்டுக் கொன்று விடப் போவதாகவும் அந்த இன்ஸ்பெக்டர் மிரட்டினாராம்.
அண்மையில் அந்த அதிகாரி வேறு மாநிலத்துக்கு மாற்றலாகி விட்டதாக தகவல் கிடைத்ததால், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் போலீசில் புகார் செய்திருக்கிறார்