Latestமலேசியா

அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீடு தாமதம்; உடனடி விளக்கம் கோரும் PRIMAS மற்றும் PRESMA

கோலாலம்பூர், மார்ச்-14 – அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்ப செயல்முறையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS மற்றும் மலேசிய முஸ்லீம் உணவக உரிமையாளர்கள் சங்கமான PRESMA கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

இந்த தாமதம் நாட்டின் உணவகத் துறையின் தினசரி செயல்பாடுகளை நேரடியாக பாதித்து வருவதாக அவை அதிருப்தி தெரிவித்தன.

அரசாங்கம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா விண்ணப்பங்கள் 2025 டிசம்பர் 31 வரை திறந்திருக்கும் என அறிவித்திருந்தாலும், விண்ணப்ப வழிகாட்டுதல்கள் அக்டோபர் மாதத்தில்தான் வெளியிடப்பட்டன… இதனால் உணவக உரிமையாளர்களுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்ய குறுகிய காலமே எஞ்சியிருந்தது.

பின்னர் கடந்த டிசம்பரில் விண்ணப்ப மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு நிரம்பிவிட்டதாகவும் திடீரென அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை புதிய இணையத் தளம் மூலம் சிறப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பலரும் நேர்முகத் தேர்வு நேரத்தை பெற முடியாமல் இருக்கின்றனர்.

இந்த பிரச்னைகளை சுட்டிக் காட்டி, PRIMAS-சும் PRESMA-வும் இணைந்து பிரதமருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி, வெளிநாட்டு தொழிலாளர் கோட்டா நடைமுறையை மறுபரிசீலனை செய்து, செயல்முறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளன.

இவ்விவகாரத்தில் மேற்கொண்டு தாமதமும் குழப்பமும் நீடித்தால் உணவகத் துறையில் ஆள் பற்றாக்குறை பிரச்னை மேலும் மோசமடையும் என அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

PRIMAS சார்பில் அதன் தலைவர் டத்தோ J. கோவிந்தசாமி@சுரேஷ் மற்றும் PRESMA சார்பில் அதன் தலைவர் டத்தோ Hj Mohd Mosin Abdul Razak-கும் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!