
மெர்சிங், செப் 19 – ஜோகூர் மெர்சிங்கிலுள்ள பெல்டா தெங்காரோவில் மூன்று நபர்கள் ஓட்டிச் சென்ற காரில்
இறந்த ஒரு புலியின் உடல் பறிமுதல் செய்யப்பட்டது.
பெல்டா தெங்காரோவில் சட்டவிரோதமாக செயல்படும் சந்தையில் உடலில் வரி வடிவங்களைக் கொண்ட இந்த புலி விற்கப்படுவதற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த புலியின் விலை 250,000 ரிங்கிட் முதல் 300,000 ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்படுவதாக தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல் காதிர் அபு ஹசிம்
( Abdul Kadir Abu Hashim ) தெரிவித்தார்.
புலியின் அனைத்து உடல் உறுப்புக்களுக்கும் கருப்புச் சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. மலாயா புலிகள் மற்றும் மிரட்டலுக்கு உள்ளாகிவரும் இதர வனவிலங்குகளை பாதுகாக்கும் முயற்சியாக வனவிலங்குகளை வேட்டையாடும் சட்டவிரோத நடவடிக்கைகளை துடைத்தொழிப்பதற்கான நடவடிக்கையில் வனவிலங்கு பூங்காத்துறை கவனம் செலுத்தி வருவதாக அப்துல் காதிர் கூறினார்.
உடலில் வரிவடிவங்களைக் கொண்ட புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, பேரா , பஹாங், ஜோகூர், கிளந்தான் ,திரெங்கானு,கெடா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் மட்டுமே அவை இருப்பதாக கூறப்படுகிறது.
மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வனவிலங்குகளை விற்பனை செய்யும் கும்பலைச் சேந்தவர்களை அடையாளம் காண போலீசுடன் இணைந்து பெர்ஹிலித்தான் செயல்பட்டு வருவதாக அப்துல் காதிர் தெரிவித்தார்.