கோலாலம்பூர், டிசம்பர்-17, நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் பதவி விலகிய நிரந்தர மற்றும் ஒப்பந்த அந்தஸ்திலான மருத்து அதிகாரிகளின் எண்ணிக்கை 6,417 பேராகும்.
அவர்களில் ஆக அதிகமாக அதாவது 4,032 ஒப்பந்த அதிகாரிகள் திகழ்கின்றனர்; ஆனால், பணி நிரந்தரமாக்கலுக்காக ஒப்பந்தத்தைப் பாதியிலேயே முறித்துக் கொண்ட 1,086 பேர் அக்கணக்கில் வர மாட்டார்கள் என KKM எனப்படும் சுகாதார அமைச்சு கூறியது.
வேலையிலிருந்து விலகியவர்களில் 2,385 நிரந்தர மருத்துவ அதிகாரிகளும், 1,046 மருத்துவ நிபுணர்களும் அடங்குவர்.
இது தவிர்த்து, 63 மருத்துவ நிபுணர்கள் சுய விருப்பத்தின் பேரில் ஓய்வுப் பெற்றனர்.
மேலவையில் செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் கேட்ட கேள்விக்கு, அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.
மேற்கண்ட மருத்துவ அதிகாரிகள் பதவி விலகியதற்கு பல காரணங்கள் உள்ளன.
பொதுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது, தனியார் துறைக்கு மாறிச் சென்றது, போட்டியிடும் ஆற்றல் மற்றும் சுகாதாரப் பிரச்னை போன்ற சொந்தக் காரணங்களும் அவற்றிலடங்கும்.
தற்போது சுகாதார அமைச்சின் கீழ் மொத்தமாகப் பணியாற்றுவோரின் எண்ணிக்கைக் குறித்தும் Dr லிங்கேஷ் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சு, இவ்வாண்டு ஜூன் 30 வரைக்குமான தகவலின் படி, நாடு முழுவதும் 298,853 பேர் KKM-மில் வேலை செய்வதாகக் கூறியது.
அவர்களில் 32,720 ஒப்பந்த அதிகாரிகளும் அடங்குவர்.
அந்த 298,000 பேரில் 7,638 பேர் மருத்துவ நிபுணர்கள் ஆவர்; 44,155 பேர் மருத்துவ அதிகாரிகள் ஆவர்.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கையை மாநிலம் வாரியாகப் பார்த்தால், சிலாங்கூர் அதில் முன்னிலை வகிக்கிறது.
சிலாங்கூரில் 1,446 மருத்துவ நிபுணர்களும் 6,274 மருத்துவ அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர்.
அடுத்தடுத்த இடங்களை சபா, ஜோகூர், பேரா ஆகியவை வகிப்பதாக KKM கூறியது.