யூகங்களும் குற்றச்சாட்டுகளும் நிறுத்தப்பட வேண்டும்; ஆமந்திரிகை பெசார் நியமனத்துக்குப் பிறகு பெர்லிஸ் ராஜா வலியுறுத்து

ஆராவ், டிசம்பர்-29,
பெர்லிஸ் மாநிலத்திற்கு ஒருவழியாக புதிய மந்திரி பெசார் நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்சாத்துவைச் சேர்ந்த குவாலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினரும், பெர்லிஸ் பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவருமான Abu Bakar Hamzah, நேற்று ஆராவ் அரண்மனையில் பதவியேற்றார்.
மந்திரி பெசாராக இருந்த Mohd Shukri Ramli உடல்நலக் காரணங்களால் டிசம்பர் 25-ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நடந்துள்ளது.
பதவி பிரமாணம் செய்து வைத்த பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில், அந்நியமனத்தைச் சுற்றியுள்ள அனைத்து யூகங்களும் குற்றச்சாட்டுகளும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“பாஸ், பெர்சாத்துவை நான் தனித்தனியாக பார்க்கவில்லை. பெரிக்காத்தான் நேஷனல் கீழ் ஒரே கட்சியாகத் தான் பார்க்கிறேன்”
இனி மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் ஒற்றுமையே முக்கியம் என அவர் சொன்னார்.
இவ்வேளையில், புதிய மந்திரி பெசார் Abu Bakar, பாஸ் மற்றும் பெர்சாத்து ஒரே குடும்பம் என்றும், சிறு சிறு மனக்கசப்புகளைக் களைந்து இரு தரப்பினரும் நல்லிணக்கத்துடன் செயல்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
2022 பொதுத் தேர்தலில் பெர்லிஸ் சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 15 இடங்களில் 14-ல் வெற்றிப் பெற்று, பாஸ் தலைமையில் பெரிக்காத்தான் முதன் முறையாக பெர்லிஸில் ஆட்சி அமைத்தது.
பாஸ் கட்சிக்கு 9 இடங்களும் பெர்சாத்துவுக்கு 5 இடங்களும் இருந்தன.
இந்நிலையில், அண்மையில் பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஸ் கட்சியின் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு மந்திரி பெசாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, கட்சி விதிகளை மீறியதாகக் கூறி, அம்மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் பாஸ் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டனர்.
இதனால் பாஸ் கட்சியின் பலம் ஆறாகக் குறைந்தது; அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 3 சட்டமன்ற உறுப்பினர்கள் சுயேட்சை உறுப்பினர்களாகி பெர்சாத்துவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால், மந்திரி பெசார் பதவியையும் அது கைப்பற்றி விட்டது.
கூட்டணிக்குள்ளேயே துரோகம் என பாஸ் தலைவர்கள் பெர்சாத்துவை சாடி வருவதால், பெரிக்காத்தானில் புதியப் புகைச்சல் கிளம்பியுள்ளது.



