ரஃபிசி: கேப்ரிஸ் உடனான தகராற்றில் அரசாங்கத்தின் மீதும் வழக்குத் தொடர தயங்க மாட்டேன்

கோலாலம்பூர், பிப்ரவரி-21,
அவதூறு தொடர்பில், சமூக ஊடக பிரபலமும் பாடகருமான கேப்ரிஸ் (Caprice) மீதான சட்ட நடவடிக்கையில், தேவைப்பட்டால் அரசாங்கத்தின் மீதே வழக்குத் தொடருவேன் என, பொருளாதார முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி எச்சரித்துள்ளார்.
கேப்ரிஸ், தேசிய முக்கியத் திட்டங்கள், குறிப்பாக செமிகண்டக்டர் ஒத்துழைப்பு மற்றும் சூரிய சக்தி திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளை ரஃபிசி மீது வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை ரஃபிசி திட்டவட்டமாக மறுத்து, அவை வெறும் கட்டுக்கதை மற்றும் தனது கண்ணியத்தை சிதைக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று கூறினார்.
எனவே, அவதூறு பரப்பியதற்காக கேப்ரிஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் சட்ட நடவடிக்கை தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த வழக்கை நீதிமன்றத்தில் முன்னெடுக்க அரசாங்கத்தையே சட்டரீதியாக எதிர்கொள்ளவும் தயங்க மாட்டேன் என, நேற்றைய Yang Berhenti Menteri போட்காஸ் பேட்டியில் அவர் கூறினார்.
ரஃபிசியின் சொந்த நிறுவனமான Invoke Solutions Sdn Bhd-டின் பங்குத்தாரரும் வர்த்தகருமான ஒரு நபருக்கு, ரஃபிசி பொருளாதார அமைச்சராக இருந்தபோது மில்லியன் கணக்கான அரசு குத்தகைக் கிடைத்ததாக, நம்பத்தகுந்த வட்டாரம் தம்மிடம் கூறியதாக கேப்ரிஸ் முன்னதாக அம்பலப்படுத்தினார்.
அன்றிலிருந்து இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கேப்ரிஸ் – ரஃபிசி இடையில் சமூக ஊடகத்தில் தொடங்கிய இந்த தகராறு தற்போது நீதிமன்றத்தை நோக்கிய முக்கிய சட்டப் போராட்டமாக மாறியுள்ளது…



