
ராஜஸ்தான், ஏப்ரல்-19- பல் வலி யாருக்கோ, பல் பிடுங்கப்பட்டது யாருக்கோ என வடிவேலு நகைச்சுவையில் வரும் சினிமா காட்சியைப் போன்றதொரு சம்பவம், நிஜ வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது.
ஆனால் பல்லுக்குப் பதிலாக இங்கு காலில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இந்தியா, ராஜஸ்தானில் விபத்தில் சிக்கி காலில் காயமடைந்த மனீஷ் எனும் ஆடவர், அறுவை சிகிச்சைக்காக கோட்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு பதிலாக வாசலில் நின்றுக் கொண்டிருந்த மனீஷின் தந்தையை அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டுச் சென்று மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வலியால் துடிக்கும் என்னை விட்டு விட்டு என் தந்தைக்கு ஜந்தாறு தையல்களைப் போட்டுள்ளனர் என மனீஷ் கூறினார்.
‘அறுவை சிகிச்சை’ முடிந்த தந்தையோ, மருத்துவர்களை தம்மால் நினைவில் கொள்ள முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட நிர்வாகம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
செய்தியைப் பார்த்த வலைத்தளவாசிகளோ, இதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை என கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
நல்லவேளை, அறுவை சிகிச்சைக் காலோடு போனது; கழுத்துக்குப் போகாமல் தப்பித்தது என அரசு மருத்துவக் கல்லூரியின் ‘லட்சணத்தை’ சாடினர்.