தாய்லாந்து எல்லையில் மோதல்; கண்ணீர் புகை தாக்குதலில் 23 கம்போடியர்கள் காயம்

செப்டம்பர் 18 – நேற்று, தாய்லாந்து எல்லையில் ஏற்பட்ட மோதலில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளும் ரப்பர் குண்டுகளும் பயன்படுத்தியதில் கம்போடியாவைச் சேர்ந்த 23 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம், மலேசியா வழிநடத்திய போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கடுமையான மோதலாக இதனை கருதுகின்றனர்.
மேலும் கடந்த மாதம் தாய்லாந்து முள் கம்பி வேலி அமைத்ததைத் தொடர்ந்து இருநாட்டு மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாய்லாந்து அதிகாரிகள் எல்லையை மீறி பொதுமக்களை தாக்கியதாக கம்போடிய தகவல் அமைச்சர், குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம் தாய்லாந்து ராணுவம், சுமார் 200 கம்போடிய போராட்டக்காரர்கள் தடுப்புகளை இடித்தும் கல், குச்சி எறிந்தும் தாக்கியதால் தற்காப்பு நடவடிக்கையாக கண்ணீர் புகை மற்றும் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தியதாக தெரிவித்தது.
அமெரிக்கா இருநாடுகளும் பதற்றத்தை குறைத்து, ASEAN உறுப்புநாடுகள் பங்குபெறும் நீண்டகால எல்லைப் பார்வையாளர் குழுவை அமைக்க ஒப்பந்தத்தை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.