சுபாங் ஜெயா, டிசம்பர்-22, டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோரை உட்படுத்திய நீதிமன்ற வழக்கில் தமது தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை, பிரதர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் மறுத்துள்ளார்.
“எனக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம்; ஆனால் நீதிமன்றத்தின் முடிவில் நான் தலையிட முடியாது; நீதிமன்றம் அதன் வேலையை செய்ய நாம் வழி விட வேண்டும்” என்றார் அவர்.
தமது பார்வையில், 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் கண்டதும் அவசர அவசரமாக பல வழக்குகள் போடப்பட்டுள்ளன.
அதனால் தான் அவை பலவீனமாக இருக்கின்றன.
அப்போது ஆட்சியில் இருந்தவரின் அரசியல் பழிவாங்கும் படலமாக அதனைத் தாம் கருதுவதாக அன்வார் சொன்னார்.
எனினும் பிரதமர் என்ற முறையில் தாமும் கவனமாகப் பேச வேண்டுமென்றார் அவர்.
பிரதமர் பெயர் குறிப்பிடா விட்டாலும், 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது ஏழாவது பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட் என்பது அனைவரும் அறிந்ததே.
முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியாருமான ரொஸ்மா, 7 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான அனைத்து 17 குற்றச்சாட்டுகளிலிருந்தும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
ரொஸ்மா மீதான அக்குற்றச்சாட்டுகள், சட்டத்திற்குப் புறம்பானவை என்பதோடு குற்றவியல் நடைமுறை சட்டத்தை பின்பற்றியிருக்கவில்லை.
எனவே, வழக்கு விசாரணை நடைபெற தேவையில்லாமலேயே ரொஸ்மாவை விடுவிப்பதாக, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி கே.முனியாண்டி அதிரடியாகத் தீர்ப்பளித்தார்.
எனினும், அரசு தரப்பு அத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளது.