
புது டெல்லி, அக்டோபர்-21, இந்தியாவில் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரங்களில் மட்டும் 30 வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதனால் பயணிகள் பீதியடைந்தது ஒருபக்கமிருக்க, உலகம் முழுவதுக்குமான விமானப் பயணங்களும் பெருமளவில் தாமதமடைந்தன.
அனைத்து விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கினாலும், வெடிகுண்டு மிரட்டலால் அவை ஜெர்மன், கனடா போன்ற நாடுகளுக்கு திருப்பி விடப்படும் சூழ்நிலைக்கு ஆளாகின.
பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் வான்வெளியில் போர் விமானங்கள் பறந்துச் சென்று இந்திய விமானங்களை மக்கள் கூட்டமில்லா பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்ற சம்பவங்களும் உண்டு.
வெடிகுண்டு புரளி கிளப்பும் பொறுப்பற்ற தரப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென இந்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை.
இவ்வேளையில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு மத்தியில் புது டெல்லியில் உள்ள ரோஹினி எனும் பகுதியில் பள்ளி அருகே மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளியின் சுற்றுச் சுவரில் ஏற்பட்ட அவ்வெடிப்பில் அருகிலிருந்த கார்களும் சேதமடைந்தன.
எனினும் எவரும் காயமடையவில்லை.
என்றாலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி உடனடியாக மூடப்பட்டது.
விழாக்காலம் என்பதால் ஏற்கனவே முழு விழிப்பு நிலையிலிருக்கும் டெல்லி போலீஸ், இந்த வெடிப்புச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.