கோலாலம்பூர், செப்டம்பர் -20, மத்தியக் கிழக்கு நாடான லெபனானில், ஐநாவின் அமைதிப் காப்புப் பணியில் பங்கேற்றுள்ள மலேசிய காலாட்படையின் (battalion) 2 வாகனங்கள் பொதுமக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை நிகழ்ந்த அத்தாக்குதலின் போது, அவ்விரு வாகனங்களிலும் 3 அதிகாரிகளும் 7 காலாட்படை வீரர்களும் இருந்துள்ளனர்.
தினசரி அமைதிக் காப்பு பணி முடிந்து முகாமுக்குத் திரும்பும் வழியில், பெரும் நெரிசல் நிலவியது.
சாலையின் இரு பாதைகளிலும் ஏராளமான அம்புலன்ஸ் வண்டிகளும் தீயணைப்பு வாகனங்களும் போய்க் கொண்டிருந்தன.
சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் பணியை பொது மக்கள் சிலர் கையிலெடுத்துக் கொண்ட நிலையில், திடீரென மலேசியக் காலாட்படை வாகனங்களை வழி மறித்து நிறுத்தினர்.
சுமார் 30 பேர் கற்களை எறிந்தும், கூர்மையான ஆயுதங்களால் வாகனங்களின் அனைத்து டயர்களையும் பஞ்சராக்கினர்.
எனினும் அங்கிருந்த லெபனானிய ஆயுதப் படை தலையிட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
நல்லவேளையாக மலேசிய வீரர்களுக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது.