
அலோர் காஜா, அக்டோபர்-12,
மலாக்காவில் மூன்றாம் படிவ மாணவியை வகுப்பறையில் கும்பலாக கற்பழித்த சந்தேகத்தில், SPM தேர்வெழுதவுள்ள 4 சீனியர் மாணவர்கள் கைதாகியுள்ளனர்.
17 வயதான அந்நால்வரும் விசாரணைக்காக 6 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அக்டோபர் 2-ஆம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியின் வகுப்பறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
அம்மாணவி தன் பொருட்களை எடுக்க வகுப்பறைக்குள் வந்தபோது அக்கொடூரத்திற்கு ஆளானார்.
இருவர் கற்பழிக்க, இருவர் அச்செயலை தொலைபேசியில் பதிவுச் செய்தது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவ்வேளையில், இந்தச் சம்பவத்தை கடுமையாக கண்டித்த கல்வி அமைச்சு, போலீஸுக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பதாக அறிவித்துள்ளது.
அதே சமயம் வைரலாகியுள்ள அந்த வீடியோவை பொது மக்கள் பகிர வேண்டாம் என்றும் அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கேட்டுக் கொண்டார்.
பட்டப் பகலில் நிகழ்ந்துள்ள இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர் நலன்கள் குறித்து பொது மக்கள் மத்தியில் கடும் கவலையை எழுப்பியுள்ளது.