![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/d4a4982a-9350-4e0e-8450-399c66812908-780x460.jpg)
பட்டவொர்த், பிப்ரவரி-8 – பினாங்கு பாகான் மக்களுக்கு இன்று ஒரு நன்னாள்.
ஆம், வகை 2 கிளினிக்காக திட்டமிடப்பட்டிருந்த பட்டவொர்த் சுகாதார கிளினிக், இன்று வகை 1 கிளினிக் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளது.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கின் விடாமுயற்சிக்கு கிடைத்த பலன் இதுவென, செனட்டர் Dr ஆர். லிங்கேஷ்வரன் கூறினார்.
குவான் எங்கின் கோரிக்கையை ஏற்று வகை 1 என்ற அந்தஸ்து வழங்கிய சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட், 120 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலான நிதி ஒதுக்கீட்டையும் அங்கீகரித்துள்ளார்.
இதன் மூலம் உள்ளூர் மக்கள் மேலும் தரமான, நவீனமான, முழுமையான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெறுவர் என Dr லிங்கேஷ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வகை 1 கிளினிக், சிறப்பு சிகிச்சை மற்றும் அதிநவீன உபகரணங்கள் உள்ளிட்ட விரிவான சேவைகளை வழங்கி, பட்டர்வொர்த் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரத் தரத்தை மேம்படுத்தும்.
கூடுதல் சிறப்பு என்னவென்றால், கோலாலம்பூருக்குப் பிறகு மலேசியாவில் உருவாகும் வகை 1 சுகாதார கிளினிக் இந்த பட்டவொர்த் கிளினிக் ஆகும்.
பினாங்கில் அமையும் அத்தகைய முதல் கிளினிக்கும் இதுவாகும்.
இதைச் சாத்தியப்படுத்திய லிம் குவான் எங் மற்றும் Dr சுல்கிஃப்ளிக்கு இந்த வேளையில் நன்றிக் கூறுவதாக Dr லிங்கேஷ் சொன்னார்.
முன்னதாக சுகாதார அமைச்சர், குவான் எங், Dr லிங்கேஷ் உள்ளிட்ட பிரமுகர்கள் பட்டவொர்த் சுகாதார கிளினிக் வளாகத்துக்கு வருகை மேற்கொண்டனர்.