கோலாலம்பூர், டிசம்பர் 20 – வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு கோலாலம்பூரிலுள்ள வங்காள தேசத் தூதரகத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தது.
ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அர்வின் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், இன்று அமைதி மறியலில் ஈடுபட்டு, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தூதரகத்தில் இந்த மகஜரை வழங்கினர்.
வங்காளதேச அரசாங்கம் ஏற்கெனவே சிறுபான்மை சமூகங்களின் நலனைப் பாதுகாக்க உறுதியளித்திருந்த போதிலும், அங்கு வன்முறைகள் தொடர்வது அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. இது மிகவும் வேதனை அளிப்பதாக ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் அர்வின் தெரிவித்தார்.
வங்காளதேச இடைக்கால அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த மகஜர் சம்பர்ப்பிப்பில், ம.இ.கா தேசிய மத்திய செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.
வங்காளதேசத்தில் சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான தீர்வு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என ம.இ.கா இளைஞர் பிரிவினர் வலியுறுத்தினர்.